ஏ.ஆர். ரகுமான் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைத்த அருமையான பாடல்

4 August 2016

இன்று அதிகாலை காலை நாளிதழ்களை படித்துக் கொண்டிடிருந்த போது, மணி 5.45 இருக்கும், எனது பள்ளித் தோழன் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன், ஒரு பாடலை பாடி, இந்தப் பாடலின் முழு விவரங்களை சொல்லு என்றார். அந்தப் பாடல் மிகவும் அருமையான பாடல். 1970 மற்றும் 80களில் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.  திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம், தனது இளமைக் குரலில்  அருமையாகப் பாடியிருப்பார். பாடலுக்கு முன்பு அவர் கொடுக்கும் ஹம்மிங் மிகவும் அற்புதமாக இருக்கும். அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.  பாடலைப் பற்றிய விவரங்களை பாடலுக்கு கீழே தருகிறேன்.




பாடல் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக கூகுள் பண்ணிப் பார்த்தேன், விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு விவரம் கிடைத்தது, ஆனால், அது உறுதியாக பதிவு செய்யப்படவில்லை. பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்று மட்டும் தெரியவந்தது. உடனே கவிஞர் திரு. முத்துலிங்கத்தை தொடர்பு கொண்டு கவிஞரின் கைப்பேசி எண்ணை வாங்கி 
திரு. பூவை செங்குட்டுவனை தொடர்பு கொண்டு, "காலம் எனக்கொரு பாட்டெழுதும் என்ற பாடலை எழுதியவர் நீங்கள்தானா என்று கேட்டேன். அதற்கு கவிஞர், இந்தப் பாடலை எழுதியது நான்தான் என்று சொன்னார். அதற்கு நான், இந்தப் பாடலைப் பற்றிய முழு விவரங்களை சொல்லுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு கவிஞர், இந்தப் பாடல் "பௌர்ணமி" என்ற படத்திற்காக எழுதப்பட்டது. இந்தப் படத்தை தயாரித்தவர் ஒரு நடன இயக்குநர். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம். மூன்றே மூன்று நாட்கள்தான் ஓடியது.  இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ராஜகோபால் குலசேகர் என்கிற ஆர்.கே. சேகர், இவர், இன்றய  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானின்  தந்தை.
இசை தொகுப்பாளர், உதவி இசை அமைப்பாளர்,இசை அமைப்பாளர் என பல பணிகள்.தக்ஷினாமூர்த்தி, வி. குமார் என்று பலருக்கும் உதவியாளராக இருந்துள்ளார். மலையாளத்தில் 53 படங்களுக்கு இசையமைத்துள்ளார் 1964ல் தொடங்கி 1976 வரை.முதல் படம் பழசி ராஜா (1964).  தமிழில் 'நாணல்' மற்றும் நீர்க்குமிழி' போன்ற தமிழ் படங்களுக்கு மறைந்த இசையமைப்பாளர் திரு. வி. குமாருக்கு உதவி இசையமப்பாளராக பணிபுரிந்துள்ளார்.  
'பௌர்ணமி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், விருகம்பாக்கத்தில் இருந்த கோல்டன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மெட்டுக்கு எழுதப்பட்ட இந்தப் பாடலை பாடிய திரு. எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.300/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக