திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்திற்கு நடிகர் விஷால் நிதியுதவி

25/11/2016

Friday (வெள்ளிக்கிழமை)


சந்திரபோஸ்
இசையமைப்பாளர் சந்திரபோஸ், 1980களில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர். அந்தக்கால கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். அவர் தமது 60வது வயதில் 2010ஆம் ஆண்டு காலமானார். அதன்பின்பு அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. சந்திரபோஸின் மனைவி ராஜகுமாரி மருத்துவ செலவுக்குக்குக் கஷ்டப்படுவதைக்   கேள்விப்பட்ட  நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலமாக சந்திரபோஸ் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

நன்றி விஷால்

சங்கீத உலகின் பீஷ்மர் எம். பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

22/11/2016

செவ்வாய்க்கிழமை (Tuesday)



06-07-1930 - 22-11-2016


சங்கீத உலகின் பீஷ்மர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.. அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கீத கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். பத்ம விபூஷண் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். பக்த ப்ரகலதா என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்திருப்பார். 

அவருக்கு கர்நாடக இசைதான் பிரதானம் என்றாலும் அவர் திரைப்படத்தில் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். 


   01)  பாண்டவர் வனவாசம் (தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது)  
   02)   திருவிளையாடல்           
   03)   நூல்வேலி                        
   04)  கலைக்கோயில்                
   05)  கவிக்குயில்                                          
   06)  சாது மிரண்டால்
   07)  சுப தினம்
   08)  கண்மலர்
   09)  உயர்ந்தவர்கள்
   10)  குமார சம்பவம்
   11)  வடைமாலை
   12)  தெய்வத்திருமணங்கள்
   13)  மிருதங்கசக்ரவர்த்தி
   14)  இசை பாடும் தென்றல்
   15)  மகாசக்தி மாரியம்மன்
   16)  திசை மாறிய பறவைகள்
   17)  நவரத்தினம் 
   18)  பசங்க


நண்பரும் "மிருதங்கசக்ரவர்த்தி" படத்தின் தயாரிப்பாளருமான திரு. கலைஞானத்திடம் அப்படத்தில் திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டேன்.  உடனே, தாராளமாக என்று சொல்லி தொடர்ந்தார், படத்தில் சிவாஜிக்கும் நம்பியாருக்கும் இசைப் போட்டி, சிவாஜி மிருதங்கம் வாசிப்பார்,  நம்பியார் பாடுவார். சிவாஜிக்கு மிருதங்கம் வாசித்தவர் உமையாள்புரம் கே. சிவராமன், நம்பியாருக்கு பாடியவர் மறைந்த பாலமுரளி கிருஷ்ணா. கதைப்படி, நம்பியார் தோற்க வேண்டும், அப்படியென்றால், பாலமுரளி தோற்குமாறு பாடவேண்டும். இதை பாலமுரளி கிருஷ்ணாவிடம் எப்படி சொல்வது என்ற பயம், ஏனென்றால், பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சங்கீத வித்வான். ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்த அனைவருமே பயந்தோம். ஆனால் அவர், பாடவேண்டிய வரிகளை படித்துப் பார்த்தார். சிரித்துக்கொண்டே, போட்டியில் தோற்குமாறு பாட வேண்டும் அவ்வளவுதானே என்று ஒரே டேக்கில் பாடிக்கொடுத்தார். மிகப்பெரிய பெருந்தன்மையான மனிதர் என்று சொல்லி முடித்தார் திரு. கலைஞானம்.

இந்த நேரத்தில் மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.வி அவர்கள் சொன்ன " இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்" என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது. பாலமுரளி கிருஷ்ணா இவ்வுவுலகை விட்டு மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற இசைச் செல்வம் என்றும் மறையாது.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 



மேற்ச்சொன்ன படங்களின் பெயர்களை தந்து உதவியவர் கவிஞர் பொன். செல்லமுத்து.








இளையராஜா டியூனை பயன்படுத்திய ஹிந்தி இசையமைப்பாளர்

19/11/2016
Saturday (சனிக்கிழமை)



செல்லாத 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் வங்கியில் கொடுத்து மாற்றுவதில் ஏற்படும் சிரமங்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் வராத ஒருசில  செய்திகளை நாளிதழ்களில் படிக்க முடியும். அப்படி ஒரு செய்தியை படித்துக்கொண்டிருந்த போது, இன்று வெளிவரும் படங்கள் அடுத்த வாரம் வெளிவரும் படங்களைப் பற்றி பார்த்துக்கொண்டிருந்த போது, ஹிந்தியில் ஷாருக்கான், அலியா பட் நடித்து கௌரி ஷிண்டே எழுதி இயக்கிய  “டியர் ஜிந்தகி” என்ற படம் வெளிவர இருக்கிறது. 

கௌரி ஷிண்டே ஏற்கனவே “இங்கிலிஷ் விங்கிலிஷ்” என்ற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய கணவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் என்ற பால்கி. இவர் ஒரு தமிழர். தமிழராக இருந்தாலும், “சீனி கம்” “பா”, ஷமிதாப் போன்ற ஹிந்திப்படங்களை இயக்கியவர். இவருடைய படங்களுக்கு இசையமைக்க, பால்கி, இளையாராஜவைத்தான் நாடிச் செல்வார். இளையராஜாவும் தமிழில் இசையமைத்த ஏதாவது ஒரு பாடலின் டியூனை பால்கியின் ஹிந்திப்படத்திற்கும் பயன்படுத்துவார். அதன் வரிசையில் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே இயக்கிய “டியர் ஜிந்தகி” என்ற படத்திற்கு இசையமைத்தது அமித் திரிவேதி என்றாலும், இளையராஜாவின் புகழ்பெற்ற மெலொடியான ரொமாண்டிக் ட்யூனை அமித் திரிவேதி பயன்படுத்தியிருப்பார்.  

இளையராஜா, முதன்முதலாக, புகழ்பெற்ற இந்த டியூனை 1983ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த "சத்மா" என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகப்படுத்தியிருப்பார். அடுத்து, ரஜினிகாந்த் நடித்து 1984ஆம் ஆண்டு வெளிவ்ந்த  "தம்பிக்கு எந்த ஊரு" என்ற தமிழ்ப்படத்தில் இரண்டாவது முறை பயன்படுத்தியிருப்பார். இளையராஜாவின் டியூனில் இசையமைப்பாளர் அமித் திரிவேதி "டியர் ஜிந்தகி" என்ற ஹிந்திப்படத்திற்கு  மூன்றாவது முறையாக ஹிந்திப்பாடலை பதிவு செய்துள்ளாளார். மூன்றாவதாக  பதிவு செய்த ஹிந்திப் பாடலும் மிக அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பாடல்களையும் கேளுங்கள். அநேகமாக, இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரே டியூனை மூன்று வெவ்வேறு படங்களுக்கு பயன்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும்.













பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்த கே.ஜே.யேசுதாஸ்

14-11-2016
திங்கள்கிழமை (Monday)


கே.ஜே.ஏசுதாஸ்

தேனினும் இனிமையான குரலில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி உலகமெங்கும் இருக்கும் இசை ரசிகர்களின் மனதை பறித்த காந்தர்வ குரலுக்கு சொந்தக்காரரான திரு. கே.ஜே.ஏசுதாஸ், இன்று பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

1961ஆம் ஆண்டு, இதே நாள் (நவம்பர் 14 1961) ஜாதி பேதம் மாதா துவேஷம் என்ற பாடலை இசையமைப்பாளர் M.B. Srinivasan  இசையில், திரு. கே.ஜே.ஏசுதாஸ் பதிவு செய்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.  அன்று முதல் இன்று வரை, அஸ்ஸாம், கொங்கனி மற்றும் காஷ்மீரி மொழிகள் தவிர, இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகளிலும் மற்றும் ஒரு சில வெளிநாட்டு மொழிகளிலும் சேர்த்து 40,000 பாடல்களை பாடியுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாஸ், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பிலிம்பேர் விருது 5 முறையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளை 43 முறையும் பெற்றுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாசுக்கு 1975ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்படங்களில் ஏறத்தாழ அவர் பாடிய அனைத்துப்பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. “பொம்மை” திரைப்படத்தில் இடம் பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலில் தொடங்கி, “அபூர்வராகங்கள்” படத்தில் பாடிய அதிசய ராகம் ஆனந்த ராகம் மற்றும் “சிந்துபைரவி” படத்தில் பாடிய  அனைத்துப் பாடல்கள்  என்று அடுக்கிக்கொண்டே போகலாம். திரு.கே.ஜே.எசுதாஸ் பாடிய சில தமிழ்த்திரைப்பட பாடல்களை கீழே காணலாம்.

   1. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்        -  மீனவநண்பன்
   2. அந்தமானைப் பாருங்கள் அழகு     -  அந்தமான் காதலி
   3. உன்னைத்தானே தஞ்சம் என்று     -  நல்லவனுக்கு நல்லவன்
   4. கண்ணே கலைமானே              -  மூன்றாம்பிறை  
   5. தூங்காத விழிகள் ஒன்று           -  அக்னிநட்சத்திரம்
   6. அகரம் இப்போ சிகரமாச்சு          -  சிகரம்
   7. மலரே குறிஞ்சி மலரே             -  டாக்டர் சிவா
   8. தென்றல் வந்து என்னைத்தொடும்  -  தென்றலே என்னைத்தொடு
   9. மூக்குத்தி பூ மேலே               -  மௌனகீதங்கள்
  10. அதிகாலை சுபவேளை             -  நட்பு

  திரு. கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் இசைப்பயணம் தொடரட்டும்.
  












இசை ரசிகர்களை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதியின் "சேட்ஜி" பாடல்

08/11/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)



"மீசையை முறுக்கு" என்ற படத்தை "அவ்னிஸ் மூவீஸ்"  நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர் இயக்குநர் சுந்தர்.C மற்றும் குஷ்பு சுந்தர்.
இப்படத்திற்கான கதை-வசனம்-பாடல்களை எழுதி இசையமைத்து இயக்குகிறார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.

படத்தின் ப்ரோமோ சாங்காக (Promo Song) சேட்ஜி என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இப்பாடல் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரையும் கவர்ந்துள்ளது.  இதை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.