ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

July 30 2016

                                       ( ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியன் & தமிழன்)

இந்தியாவின் சுதந்திர தினம் ஐ.நா. சபையில் கொண்டாட உள்ளது. நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் வழங்க உள்ளார். அவருடைய இசைப் பயணத்தில், இந்நிகழ்ச்சி மறக்க முடியாத பதிவாக இருக்கும். இதற்கு முன்பு 1966ஆம் ஆண்டு, பிரபல கர்நாடக இசைப் பாடகி, மறைந்த திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு. இப்போதுதான் இந்தியர் ஒருவரின், அதுவும் தமிழரின் இசை நிகழ்ச்சி ஐ.நா சபையில் நடக்க உள்ளது. இது தமிழனுக்கு பெருமைதானே. ஏ.ஆர். ரகுமானை வாழ்த்துவோம். 

தப்லா கலைஞர் லச்சு மகாராஜ் காலமானார் (World renowned Tabla Player Lachchu Maharaj Passes away)

July 30 2016


உலகப் புகழ் பெற்ற தபேலா (தப்லா) கலைஞர் திரு. லஷ்மிநாராயண் சிங் என்கிற லச்சு மகாராஜ் நேற்று முன் தினம் இரவு (புதன்கிழமை) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

லச்சு மகாராஜ் பற்றி, தம்பி, ராஜேந்திர பிரசாத் சிங் கூறும் போது, புதன் கிழமை, நெஞ்சு வலிப்பதாக கூறினார்.  உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றோம். டாக்டர்களும் சிகிச்சை அளித்தார்கள், ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு காலமானார்.

லச்சு மகாராஜ், தனது தந்தை வாசுதேவ சிங்கிடம், 10 வயதில் தபேலா கற்க ஆரம்பித்தார். தந்தையிடம் விரைவாகவும், கச்சிதமாகவும் கற்றுக் கொண்டார்.

தபேலா வாசிப்பில், அவருக்கென தனி பாணியை (Unique Style) உருவாக்கி அதில் (Perfection) கச்சிதத்தையும் சேர்த்ததனால், இசை ரசிகர்களுக்கு லச்சு மகாராஜவின் வாசிப்பு பிடிக்க ஆரம்பித்தது. இதனால், அவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.

பக்திக்கும் மற்றும் தத்துவத்திற்கும் புதிய டுயூன்களை (Tunes) உருவாக்கி, பல பயிற்சி நேரங்களில் வாசிக்க ஆரம்பித்தார்.

லச்சு மகாராஜாவிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று ஹிந்தி திரைப்பட இசை உலகில் தபேலா கலைஞர்களாக உள்ளனர்.

லச்சு மகாரஜாவுடன், சிதார் கலைஞர் அப்துல் ஹலிம் ஜாபர் கான் மற்றும் பரத நாட்டிய கலைஞர் லக்‌ஷ்மினி பானிகிரகியும் 40 நாட்களில் 27 நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் வழங்கியது மிகப் பெரிய சாதனையாகும்.

மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க முடிவெடுத்த போது, இசை ரசிகர்கள் கொடுக்கும் கௌரவத்தைதை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்ம விருது தேவையில்லை என்று கூறி வாங்க மறுத்து விட்ட மாபெரும் தன்மானக் கலைஞர் லச்சு மகாராஜ்.

அந்த தன்மானக் கலைஞர் இன்று உயிருடன் இல்லை.  ஆனால், அவருடைய தபேலா வாசிப்பு உலக இசை ரசிகர்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைட்டும்.


இசைக் கருவிகள் வாசிக்கும் மாற்றுத் திறனாளிகள்

July 27 2016

                                       
                               
மேலே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், மாற்றுத் திறனாளிகள் இசைக்கருவிகளை சர்வ சாதாரணமாக வாசிக்கிறார்கள் . இந்த வீடியோ, வாழ்க்கையில் சோர்ந்து இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வீடியோ .

பிரபல மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன் பிறந்த தினம் இன்று

July 27 2016


                                             வித்வான் திரு. திருச்சி சங்கரன்

திருச்சி சங்கரன் 1942ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தார். இவர் தனது உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமனிடம் இசைப் பயிற்சியை தொடங்கினார். பிறகு பழனி சுப்பிரமணிய பிள்ளையிடம் மிருதங்கம் கற்றார். திருச்சிராப்பள்ளியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் தனது 13 ஆம் வயதில் மிருதங்க வாசிப்பை அரங்கேற்றம் செய்தார்.

இவர், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர்களான செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்ரமணி அய்யர், மதுரை மணி அய்யர் மற்றும் செம்மங்குடி சீனிவாச அய்யர் ஆகியோருக்கு பக்கவாத்யம் வாசித்துள்ளார்.

இவர் தற்போது,கனடாவின் தலைநகர் டொரண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருக்கிறார். இது தவிர, மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர், தன் இசை வாழ்வில் நடந்த சம்பவங்களில் இரண்டு சம்பவங்களை மறக்க முடியாதவைகளாக குறிப்பிடுகிறார்.

ஓன்று, ஒருமுறை மறைந்த திருமதி. எம்.எஸ் அம்மா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது வழியில் கனடாவின் டொராண்டோவில் இறங்கினார். அவரைப் பார்க்க திரு. சங்கரன் ஏர்போட்டிற்கு வந்திருந்தார். எம்.எஸ் அம்மாவை பார்த்தவுடன், எங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி எம்.எஸ். அம்மா சங்கரன் இல்லத்திற்கு விஜயம் செய்தார். அப்போது, சங்கரன், எம்.எஸ்ஸிடம், செம்மங்குடி சீனிவாசய்யர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு எம்.எஸ்., நன்றாக உள்ளார், ஆனால், உங்களை ரொம்ப miss பண்றார் என்று சொன்னவுடன், சங்கரன் கண்களில் கண்ணீர்.

இரண்டாவது, உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமன், திருச்சியிலிருந்து, தில்லிக்கு அகில இந்திய வானொலியில் பணியாற்ற சென்றார். சில மாதங்கள் கழித்து,  சங்கரன் ஒரு முறை சகோதரரை பார்க்க சென்றார். வானொலியில், மிருதங்க வாசிப்பை ஒலிப்பதிவு செய்வதற்காக சங்கரனை கூட்டிச் சென்றார். அப்போது, பண்டிட் ரவி சங்கர், இசை நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்யும் இசை நடத்துனராக இருந்தார். ஒலிப்பதிவு முடிந்தவுடன், ரவி சங்கர், தனது இல்லத்திற்கு அழைத்தார். மேலும், தேர்தெதெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் (selected audience)  சங்கரனின் தனி வாசிப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

திரு. சங்கரன், விவேகானந்தா கல்லுரியில், பொருளியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 

திரு. சங்கரன் மேலும் பல சாதனைகள் புரிய, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


செம்மங்குடி சீனிவாச அய்யரின் பிறந்த தினம் இன்று

July 25 2016


                               (இ-வ) மறைந்த குன்னகுடி வைத்தியநாதன், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், செம்மங்குடி சீனிவாச அய்யர் மற்றும் மகாராஜபுரம் சந்தானம்.

வயலின் விதுஷி ஏ. கன்யாகுமரிக்கு 'சங்கீத கலாநிதி விருது

July 25 2016

                                                வயலின் கலைஞர் ஏ. கன்யாகுமரி

சென்னையில் உள்ள பாரம்பரிய சங்கீத சபாவான மீயுசிக் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் 'சங்கீத கலாநிதி' விருது சங்கீத வித்வானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது பெறுவதற்கு புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் ஏ. கன்யாகுமரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் பெண் வயலின் கலைஞர் ஆவார்.  இசைத் துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஏ. கன்யாகுமரி, மறைந்த திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் மாணவியாக 17 ஆண்டுகள் இருந்துள்ளார். ஜி.என். பாலசுப்ரமணியத்திடமும் சில காலம் மாணவியாக இருந்துள்ளார்.  
'சங்கீத கலாநிதி'  விருது பெறும் ஏ.கன்யாகுமரிக்கு வாழ்த்துகள்.

மீயுசிக் அகாடமி அறிவித்துள்ள மற்ற விருதுகள்

   1.   சங்கீத கலா ஆச்சாரிய விருது        :   ருத்ரபட்டி தியாகராஜன் - சாராநாதன்
                                                                               சகோதரர்கள்
                                                                              கர்நாடக இசைக் கலைஞரும்                                                                                                  பேராசிரியருமான
                                                                         திரு.கே. வெங்கடரமணன்  

   2.   டி.டி.கே விருது (TTK Award)               :   1.  பாடகி நிர்மலா சுந்தர்ராஜன்
                                                                         2.  பாடகர் எம். கோடிலிங்கம்

   3.   இசை ஆய்வாளர் விருது                 :    திருமதி. ராம கௌசல்யா

   4.   பாப்பா வெங்கர்ராமய்யா விருது :       சிக்கில் பாஸ்கரன்

பரத நாட்டிய கலைஞர் சாருமதி சருக்கை நாட்டிய கலா ஆச்சாரியா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது பெறும் மற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
                                                                                             

பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஆனந்த் பக்‌ஷியின் 87வது பிறந்த தினம் இன்று

July 21 2016


(இ-வ) இசையமப்பாளர் லக்‌ஷ்மிகாந்த், லதா மங்கேஷ்கர், பாடகர் கிஷோர் குமார், கவிஞர் ஆனந்த் பக்‌ஷி மற்றும் இசையமப்பாளர் பியர்லால்.

இன்று தமிழ்த் திரையுலகின் கருப்பு தினமாக இருந்தாலும், ஹிந்தி திரைப்பட உலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் ஆனந்த் பக்‌ஷியின் பிறந்த தினமும் இன்றுதான்.

ஆனந்த் பக்‌ஷி, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ராவல்பிண்டி நகரில் 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ந் தேதி பிறந்தார்.

சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். பள்ளிப் படிப்பிற்கு பின்பு இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய  ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணி புரிந்தார். 

ராணுவத்தில் பணி புரிந்த காலத்தில் ஆனந்த் தன்னுடைய கவிதை தொகுப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்ட “சைனிக் சமாசார்” என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார்.

பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும்  தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்தார்.

1956ஆம் ஆண்டு 60 பாடல்களை எழுதிக் கொண்டு ஹிந்தி திரைப்பட உலகில் நுழைவதற்காக மும்பை வந்தார், ஆனால், அவர் முயற்சி பலிக்க வில்லை.

1958ஆம் ஆண்டு பிரிட்ஜ் மோகன் படமான “பால ஆத்மி” (Bhala Aadmi) என்ற ஹிந்திப் படத்தில் பாடல் மூலம் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது.

ஹிந்தி திரைப்பட உலகில் 3500 பாடலுக்கு மேல் எழுதிய கவிஞர்.

Mome Ki Gudiya” என்ற ஹிந்திப் படத்தில் முதன் முதலாக பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கருடன் இணைந்து டூயட் பாடலும் பாடியுள்ளார்.

ஆனந்த் பக்‌ஷி, லக்‌ஷ்மிகாந்த்-பியர்லால் என்ற இசையமைப்பாளருக்குதான் அதிக பாடல்கள் எழுதியுள்ளார்.

“ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்ற ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற “ தம் மேரே தம்” என்ற பாடலை எழுதியதின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

ஆனந்த் பக்‌ஷி 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி காலமானார். அவருடைய ஒரு சில பாடல்களை கீழே வீடியோவில் கொடுத்துள்ளோம். இந்தப் பாடல்களையெல்லாம் கேட்டவுடன் உங்களுடைய பழைய ஞாபகங்கள் வரும். இந்தப் பாடல்களையெல்லாம் ஆனந்த் பக்‌ஷிதான் எழுதியுள்ளாரா என்று ஆச்சரியத்துடன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வீர்கள்.





நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தினம் இன்று

21 July 2016

                                                  வீர சிவாஜியின் சிலை அருகில் நடிகர் திலகம் சிவாஜி

இன்று (21-07-2016) தமிழ்த் திரையுலகின் கருப்பு தினம். நடிப்புக்கு இலக்கணமாக இருந்த, நடிப்பின் களஞ்சியமாக (Encyclopedia of acting)  இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த தினம்.  இன்றய தலைமுறை நடிகர்களின் நடிப்பில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் நடிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். உதாரணத்திற்கு, கௌரவம் படத்தில் ஒரு வக்கீல் எப்படி இருக்க வேண்டும் என்று நடித்திருப்பார். காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை தங்கப்பதக்கம் படத்தில் நடித்துக் காண்பித்திருப்பார். ஒரு நடிகன் படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் ராமன் எத்தனை ராமனடி படத்தில் நடித்துக் காண்பித்திருப்பார். இப்படி எவ்வளவோ விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.  நடிகர் திலகத்திற்கு கண்ணீர் அஞ்சலி.

முதுபெரும் ஹிந்தி பின்னணிப் பாடகி முபாரக் பேகம் காலமானார்


                            முபாரக் பேகம் பாடத் தயாராகிறார், உடன் இசைக் கலைஞர்கள்

முதுபெரும் ஹிந்தி  பின்னணி பாடகி முபாரக் பேகம் கடந்த செவ்வாய்க் கிழமை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80, சிறிது காலம் உடல்நலமில்லாமல் இருந்தார்.

1936ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள சுஜன்கார் என்ற ஊரில் பிறந்த பேகம் மும்பைக்கு வருவதற்கு முன் தன் இளமைப் பருவத்தை அகமதாபாத்தில் கழித்தார். ஊஷ்தத் ரியாஸுதின் கான் மற்றும் சமத் கான் என்பவர்களிடம் பாடுவதற்கு பயிற்சி பெற்றார்.

1949ஆம் ஆண்டு நஸ்ஹாத் என்ற இசையமப்பாளரின் இசையில் முதன் முதலாக ஹிந்தி திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். 1949-50களில் ஒரு சில பாடல்களே பாடியிருந்தாலும், 1960கள் பேகத்திற்கு ஒரு பொற்காலமாகும்.


சங்கர்-ஜெய்கிஷான், SD பர்மன் மற்றும் சலில் சௌத்ரி போன்ற புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையில் பாட ஆரம்பித்தது, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 1980வரை பாடினார். அதன் பிறகு சில வருடங்கள் மேடைக் கச்சேரிகள் செய்தார். முபாரக் பேகம் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மறைவதில்லை. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இசையில் அதிக ஈடுபாடு கொண்ட மறைந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி

July 16th 2016

தமிழ் இலக்கிய எழுத்தாளர் மறைந்த கு. அழகிரிசாமி இசையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை ஒரு நிகழ்வில் அவர் நிருபித்துள்ளார்.

ஒரு சமயம், மறைந்த டி.என். ராஜரத்னம் பிள்ளை, திருநெல்வேலி அருகில், நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, பிடாங்கு வெடி வெடித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம், வாசிப்பிற்கு இடையூறாக இருந்ததால், வாசிப்பை நிறுத்தி விட்டார். இதை அறிந்த இளைஞர் கு. அழகிரிசாமி, வெடி வெடிப்பவரை மிரட்டி, நிறுத்த வைத்து, இசையை தொடர செய்தார். அந்த அளவுக்கு  இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்.


பின்னாளில், இயல்பாகவே இசையறிவு உள்ள அவர் நாட்டுப்பாடல்களையும், காவடிச் சிந்தையும் தேடித் தேடி கேட்டு, அதற்கு இலக்கிய வடிவம் கொடுத்து எழுத்தாக்கி தொகுத்தார்.

இன்று விஞ்சமுரி வரதராஜ அய்யங்காரின் 101வது பிறந்த தினம்

July 15th 2016



விஞ்சமுரி வரதராஜ அய்யங்கார் பற்றிய ஒரு சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறோம்.

01)   1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி செல்வச் செழிப்பான
குடும்பத்தில் பிறந்தார்.

02)   தனது 7வது வயதில் மைசூர் ஷேஷன்னா முன்னிலையில் முதல் கச்சேரி செய்தார்.

03)   டைகர் வரதாச்சாரி 1950ல் மறைந்தார், அவர் மறையும் வரை, அவரிடம் குருகுல வாசம் இருந்தார்.

04)   ஹைதராபாத் ஆல் இந்திய ரேடியோவில் 8 வருடங்கள் பணியாற்றினார். அவர் பணியாற்றிய அந்த 8 வருடங்களில் கர்நாடக இசை முக்கியத்துவம் பெற்றது.
 
05)   விஞ்சமுரி வரதராஜ அய்யங்காருக்கு நடமாடும் இசைக் களஞ்சியம்
(Walking encyclopedia of music) என்ற பெயரும் உண்டு.

06)   1943ல் அகில இந்திய வானொலி, சென்னை மூலம்  கான லகரிஎன்ற தலைப்பில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கர்நாடகம் சங்கீத வகுப்புகளை ஆரம்பித்தார்.

07)   முத்துசாமி, தீட்சதர், தியாகராஜர் மற்றும் கொவ்வூர் பஞ்சரத்தன கீர்த்தனைகளில் அரிய கீர்த்தனைகளை எடுத்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

08)   விஞ்சமுரி வரதராஜ அய்யங்கார் ஒரு சிறந்த நிர்வாகி, மியூசிக்காலாஜிஸ்ட்பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த இசையமப்பாளர்.

   இப்படி பன்முகம் கொண்ட திறமையாளராக இருந்த விஞ்சமுரி வரதராஜ அய்யங்காரை, அன்னாரது 101வது பிறந்த நாளில் நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.




மறைந்தும் மறையாத மெல்லிசை மாமன்னரின் முதலாவது நினைவு நாள்

July 14th 2016

இன்று, தமிழ்த் திரையுலக இசைச்  சக்கரவர்த்தியின் முதலாவது நினைவு நாள்.  மறைந்த திரு. எம்.எஸ். விஸ்வநாதன், மனிதன் பிறந்ததலிருந்து இறக்கும் வரை அவனோ அல்லது அவளோ சந்திக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் இசையமத்துள்ளார். அதே போல பல்வேறு காலங்களுக்கும் இசையமைத்துள்ளார். 



ஐயா, நீங்கள் கொடுத்த இசை இருக்கும் வரையில் உங்கள் நினைவு இருக்கும். தமிழ்த் திரையுலகில் நீங்கள் இசையமைத்த காலம் வசந்த காலம். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்.

தூய்மை கங்கா பாடலைப் பாடிய திருச்சூர் ப்ரதர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர். ரகுமான்

July 12th 2016

தூய்மை கங்கா திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும்.
சென்ற வாரம் கங்கை நதி பாயும் பல்வேறு இடங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 

இத்திட்டத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும் வகையில் அதிகாரப்பூர்வ பாடல் (Official Anthem) உருவாக்கப்பட்டது. இப்பாடலுக்கு ஆதி சங்கரரின் கங்காஷ்டகத்திலிருந்து வரிகளை எடுத்து, அதற்கு இசை வடிவம் கொடுத்து பாடியுள்ளனர் கர்நாடக இசைப் பாடகர்கள் திருச்சூர் ப்ரதர்ஸ்.

இந்தப் பாடலைக் கேட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் திருச்சூர் ப்ரதர்ஸுக்கு தனது வாழ்த்தை டுவிட் செய்து தெரிவித்துள்ளார்.

இதோ அந்த நமாமி கங்கா பாடல்

ராகமாலிகா குழுவும் தனது வாழ்த்துகளை திருச்சூர் ப்ரதர்ஸுக்கு தெரிவித்துக் கொள்கிறது. 

ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாரதிதாசன் பாடல்

Friday 8 July 2016
_________________________________________________________________________________

"அச்சமென்பது மடமையடா" என்ற பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர். ரகுமான். கடந்த மாதம் 17ஆம் தேதி இப்படத்திற்கான இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.  பொதுவாகவே ரகுமான் தமிழ் இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைப்பார். இதற்கு முன்னர் பாரதியார் பாடலை "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படத்தில் பயன்படுத்தியிருப்பார். ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பிறகு பாரதிதாசன் வரிகளுக்கு ரகுமான், தன் இசையால் மெருகேற்றியுள்ளார்.  பாரதிதாசனின் கவித்துவமான வரிகள் வரும் முன் ரகுமானின் ரம்மியமான இசை வருகிறது. அதன் பிறகு பாடல், பாடியவர் விஜய் ஏசுதாஸ்.  இவர், அவரது தந்தையின் ஆரம்ப கால  குரலை ஞாபகப்படுத்துகிறார்.  பல்லவி முடிந்தவுடன் திரு.ஆர்.கே. பிரபாகரின் வயலின் இசை (solo bit) சுமார் 40 விநாடிகளுக்கு வருகிறது.  இந்த வயலின் இசை மனதை வருடுகிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.





இதே படத்தில் வரும் இன்னொரு பாடலும் மிக அருமை. பெண் கவிஞர் திருமதி. தாமரை எழுதிய பாடல். பறக்கும் ராசாளியே ராசாளியே என்று இப்பாடல் ஆரம்பிக்கிறது. இப்பாடலில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், பாடலில் ஆங்காங்கே மரபுசார் இசையும் ஒலிக்கிறது. அருணகிரி நாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்ணம் சுப்ரமணிய்யரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப்படிவங்களும் வருகின்றன. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும் போது கிடைக்கும் அனுபவமே அலாதிதான்.  திரு. ஏ.ஆர். ரகுமானின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். இதோ அந்தப் பாடல்