கர்நாடக சங்கீத பாடகர் ஒ.எஸ். அருணின் ஆலாபனா ட்ரஸ்ட் பற்றிய ஆவணப்படம் மற்றும் கச்சேரி

29/09/2016
(வியாழக்கிழமை) Thursday

பாடகர் திரு. ஒ.எஸ். அருண்

திரு. ஒ.எஸ். அருண், பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத உலகில் 30 வருட அனுபவம். உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். 

இது தவிர, இவரும் இவரது மனைவியும் இணைந்து ஆலாபனா என்ற பெயரில் கடந்த 18 ஆண்டுகளாக ட்ரஸ்ட் நடத்தி வருகின்றனர். இந்த ட்ரஸ்ட் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு  இடங்களில் ஏழைகளுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தரமணியில் உள்ள அனாதை இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு  இலவசமாக ஆடைகளை வழங்கி மதிய விருந்து கொடுத்தார்.  அதற்கு முன்பு, குழந்தைகளுக்காக அவர் நடத்திய கச்சேரி என் கண் முன் வந்து போகிறது. 

30-09-2016 அன்று, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மாலை 6.30 மணிக்கு ட்ரஸ்ட் மூலமாக நடைபெற்ற பல்வேறு பணிகளை தொகுத்து ஆவணப்படமாக திரையிடுகிறார். 30 நிமிடங்கள் ஓடக்கூடியது இப்படம். அதன் பிறகு , இரவு 7 மணிக்கு திரு. ஓ.எஸ். அருண் அவர்களின் கச்சேரி ந்டைபெறும். 

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் "இமைக்கும் நொடிகள்"

29/09/2016
Thursday (வியாழக்கிழமை)

                இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து விசால் நடித்துள்ள "கத்திச் சண்டை" தமிழ்ப்படம் வெளியீட்டிற்கு தயராக உள்ளது. இதற்கிடையே, அஜய் ஞானமுத்து தயாரிக்கும் "நொடிக்கும் இமைகள்" என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான இசையமைப்பு பணியை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளார்.

அண்ணாசாமியின் கீர்த்தனைகள்

25/06/2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)

அண்ணாசாமி சாஸ்திரி, கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸியாமா சாஸ்திரிகளின் பேரன் ஆவார். பஞ்சு சாஸ்திரியின் மகன், இயற்பெயர் "சியாம கிருஷ்ணா" அண்ணா என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். தந்தையாரிடம் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம், சங்கீதம் முதலியவகளை கற்றுத் தேர்ந்தார்.  சிறந்த வர்ணங்கள் மற்றும் கிருதிகளை சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் எழுதியுள்ளார். இவர்களுடைய கிருதிகளில் புகழ் பெற்றவை சில

                 ஸ்ரீ காஞ்சி நகரா நாயகி - அசாவேசி ராகம் - ஆதி தாளம்
                 பரமபாவனி - அடானா ராகம் - ஆதி தாளம்
                 ஸ்ரீமகாரஞ்சலி - பிலஹரி ராகம் 
                 ஸ்ரீகாமாட்சி - சாரங்கா - ஆதி தாளம்

இவருடைய நெருங்கிய நண்பர் வீணை குப்பய்யர்.  இருவரும் அடிக்கடி சந்தித்து கடினமான கற்பனைச் சுரங்களை பாடி மகிழ்வதுண்டு. தமது 73வது வயதில் 17/02/1900 காலமானார். இவரது பல இசை பனுவல்கள் இவரது நுண்ணிய இசை புலமைக்கு எடுத்துக்காட்டாகும்,



மறக்கப்பட்ட மாபெரும் நாடகக்கலைஞர் ஆர்.வி. உடையப்பா (R.V. Udaiyappa - The forgotten Tamil Drama Artist)

20/09/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)

தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்துதான் அதிக அளவில் நாடகக்கலைஞர்கள் பல்வேறு சமூக வரலாற்று நாடகங்களை மேடையேற்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மறைந்த நாடக மேதை கலைமாமணி திரு. ஆர்.வி. உடையப்பா. 

அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள


ட்ரம்பெட் வாசிக்கும் 7 வயது சிறுமி

17/09/2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)


அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஸ்டிவன்சன் யுனிவர்சிட்டி (Stevension University) உள்  விளையாட்டு  அரங்கில் ஜூடி (Judy) எனும் 7 வயது இசை மேதை ட்ரம்பெட் (Trumpet) வாசித்து அரங்கில் இருந்த அனைவரின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படம்.



இனிய ஓணம் வாழ்த்துகள்

14/09/2016
Wednesday (புதன்கிழமை)

கேரள வாழ் மக்களுக்கு இனிய ஓணம் வாழ்த்துகள். இத்தருணத்தில், சூர்யகாயத்ரி பாடிய ஓணம் பாடலை வழங்குகிறோம்.


மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்

10-09-2016
Saturday (சனிக்கிழமை)

திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி


கர்நாடக இசை மேதை மறைந்த திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மியின் நூற்றாண்டு விழா, கடந்த ஆண்டு மும்பை, ஷண்முகாநந்தா ஹாலில் தொடங்கிய நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தொடங்கும் ஒரு வாரகால கொண்டாட்டங்களோடு நூற்றாண்டு விழா நிறைவு பெறுகிறது. டாக்டர். திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி விருதுகள், இந்தியாவின், மதிக்கதக்க ஏழு (7) பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அவர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்களான, கிரிஜா தேவி, கிஷோரி அமோன்கர், அருணா சாய்ராம், விசாகா ஹரி, பரத நாட்டிய கலைஞர்கள், யாமினி கிருஷ்ணமூர்த்தி, வைஜெயந்திமாலா மற்றும் பாண்டவானி கலைஞர் தீஜன் பாய்.

இவ்விழாவில், திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய பிரபல பாடல்களுக்கு 100 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாட உள்ளனர். திருமதி. எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட உள்ளது.


மேலும், இந்தாண்டுக்கான “சங்கீத ப்ராச்சாரியா” விருது கடம் கலைஞரும் கிராமி விருது பெற்றவருமான விக்கு விநாயகராமிற்கு வருகின்ற 14ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இம்மாதம் 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பேகம் பர்வீன் சுல்தானா மற்றும் பரத் கே. சுந்தரின் கச்சேரியோடு விழா நிறைவு பெறுகிறது. மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்.

இரு கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு கல்கி விருது (Two Carnatic Musicians receive Kalki award)

10-09-2016
Saturday (சனிக்கிழமை)


கல்கி விருது பெறும் திரு.அஸ்வத் நாராயணன் மற்றும் வயலின் இசைக் கலைஞர் சாருமதி ரகுராமன்

அமரர் கல்கி பிறந்தநாள் விழா, கல்கி நினைவு விருது வழங்கும் விழா கல்கி நினைவு அறக்கட்டளை சார்பில், மயிலாப்பூர் ராகசுதா ஹாலில் நேற்று நடைபெற்றது.

விழாவில், கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் அஸ்வத் நாராயணன் மற்றும் வயலின் இசைக்கலைஞர் சாருமதி ரகுராமன் ஆகியோருக்கு கல்கி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விருதினைப் பெற்ற அஸ்வத் நாராயணன் பேசுகையில், “இந்த விருதினைப் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளதாக உணர்கிறேன்,” என்றார்.

சாருமதி பேசுகையில் “இந்த விருது நிச்சயம் என்னை ஊக்கப்படுத்தும். கர்நாடக இசையில் என்னை ஊக்கப்படுத்திய என் பெற்றோர், குருவிற்கு நன்றி கூறுகிறேன்”, என்றார்.

விழாவின் நிறைவாக, விருது பெற்ற அஸ்வத் நாராயணன், சாருமதியின் இசைக் கச்சேரி நடைபெற்றது.


உலகின் மிகச் சிறிய கிராண்ட் பியானோ (The World’s smallest Grand Piano)

உலகத்திலேயே மிகச் சிறிய கிராண்ட் பியானோவை, வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனமான செகா (Sega) தயாரித்துள்ளது. இதன் அளவு 25 செ.மீ அகலம் மற்றும் 18 செ.மீ உயரம். இந்த கிராண்ட் பியானோவை வாசிக்கலாம்.  ஆனால், மிகவும் சிரமப்பப்பட்டு வாசிக்க வேண்டும். வாசிக்கும் கீ யின் அளவு 18 மில்லி மீட்டர்.  பார்ப்பதற்கு மிக அழகாகவும், அதிலிருந்து வரும் ஒலி (Sound) ரம்யமாகவும் உள்ளது. அதன் வீடியோ கீழே



கர்நாடக சங்கீத பாடகிகள் ரஞ்சனி காயத்ரிக்கு இந்திரா சிவசைலம் விருது

08-09-2016

Thursday (வியாழக்கிழமை)
ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் (Ranjani-Gayathri Sisters)



கர்நாடக சங்கீதத்தில் பிரபலமான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் 2016ஆம் ஆண்டிற்கான இந்திரா சிவசைலம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, சென்னை மியுசிக் அகாதெமியில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று இந்திரா சிவசைலம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.  விருது பெறும் சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

இரு கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு இன்று பிறந்தநாள்

06/09/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)


                                  திருமதி. நீலா                                               திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபன்
                    (புல்லாங்குழல் இசைக் கலைஞர்)                                (வீணை இசைக் கலைஞர்)





திருமதி. நீலா
(புல்லாங்குழல் கலைஞர்)


இன்று, புல்லாங்குழல் கலைஞர் திருமதி. நீலா அவர்களுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் கொண்டாடும் திருமதி. நீலாவிற்கு "ராகமாலிகா" தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக இசை  உலகில் சிக்கில் சகோதரிகளை (Sikkil Sisters) தெரியாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக புல்லாங்குழல் வாசிப்பது கடினமானது. அதுவும் பெண்கள் புல்லாங்குழல் வாசிப்பது என்பது மிகவும் கடினமானது.

திருமதி. நீலா பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் மற்றும்  தன்னுடைய விடாமுயற்சியினாலும் புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். சிக்கில் சகோதரிகளில்  திருமதி. நீலா இளைய சகோதரி.  திருமதி. நீலாவுக்கு 7 வயாதாக இருக்கும் போது, புல்லாங்குழல் வாசிக்கும் பயிற்சியை தொடங்கினார். சரளி வரிசையைக்  கற்றுக்கொள்ள 1-1/2 வருடங்கள் ஆனது. இவருடைய புல்லாங்குழல் வாசிப்பு அரங்கேற்றம் சிக்கில் சிங்காரவேலர் கோவிலில் நடந்தது. இவருடைய அரங்கேற்ற  வாசிப்புக்கு ராமு பாகவதர் வயலினும் இவருடைய தந்தை மிருதங்கமும் வாசித்தனர். 1953ஆம் ஆண்டு, தஞ்சாவூர் காசி விஸ்வநாதர் கோவிலில், சிக்கில் சகோதரிகளாக தங்களது புல்லாங்குழல் இசைப் பயணத்தை தொடங்கினர் திருமதி. குஞ்சுமணியும் மற்றும் திருமதி நீலாவும். இந்தக் கச்சேரிதான் இருவரின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர்களது வாழ்வில் வசந்தம் வீச்த் தொடங்கியது. 

திருமதி. நீலாவிற்கு ஒரே புதல்வி, அவரும் மிகச்சிறந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர், பெயர், திருமதி.  மாலா சந்திரசேகர். திருமதி. நீலாவின் உறவினர் மறைந்த புல்லாங்குழல் கலைஞர் திரு. ந. ரமணி.

திருமதி. நீலா வாங்கிய விருதுகள்:

1. கலைமாமணி                              -    1973ஆம் ஆண்டு
2. சங்கீத நாடக அகாதமி             -    1989ஆம் ஆண்டு
3. சங்கீத கலாநிதி                           -    2002ஆம் ஆண்டு

இவர்கள் பெற்ற விருதுகளில் சங்கீத நாடக அகாதமி விருது சிறப்பான ஒன்றாகும். சங்கீத நாடக அகாதமி ஆரம்பித்தது முதல் இதுவரை 9 புல்லாங்குழல் கலைஞர்களுக்கு விருதுகள் தரப்பட்டுள்ளன. விருது பெற்ற 9 கலைஞர்களுள் இவர்கள் இருவர் மட்டுமே பெண் புல்லாங்குழல் கலைஞர்கள்.

சிக்கில் சகோதரிகள் வாசித்த புல்லாங்குழல் இசையை கேளுங்கள்








திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபன்
   (வீணை இசைக் கலைஞர்)


வீணை இசைக் கலைஞர் திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபனுக்கு பிறந்த நாள். அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்,  அவர் விட்டுச் சென்ற இசையை மறக்க முடியாது. பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா, வீணை வித்வான் காரைக்குடி திரு. சாம்பசிவ அய்யர். (காரைக்குடி வீணா சகோதரர்களில் இளையவர்). திருமதி ராஜேஸ்வரி பத்மநாபனின்  சகோதரர் காரைக்குடி திரு.எஸ். சுப்ரமணியன், இவர் சென்னையில் ப்ரஹத்வணி என்ற இசைப் பள்ளியை நடத்தி வருகிறார்.

ராஜேஸ்வரி பத்மநாபன், தனது 5 வயது முதல் அவரது தாத்தா சாம்பசிவ அய்யர் மறையும் வரை குருகுல முறையில் இசை பயின்றார். பின்னர், தனது வாய்ப்பாட்டு பயிற்சியை மைசூர் வரதாச்சாரியாரிடம் பயின்றார்.

இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார், அதில் “கலைமாமணி” மற்றும் “சங்கீத கலாநிதி” விருதுகள் குறிப்பிடதக்கவை.

ஒருசில வர்ணங்கள் (Varnams) மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார். கும்பேஷ்வரர் குறவஞ்சி என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்னை கலாஷேத்ராவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரது மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

திருமதி ராஜேஸ்வரி பத்மநாபன் வீணை வாசித்த நிகழ்ச்சியை இதோ உங்களுக்காக.










ஏ.ஆர். ரகுமான் பாடல்களை பாடும் பெர்க்லி மியுசிக் காலேஜ் மாணவர்கள்

04-09-2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெர்க்லி காலேஜ் ஆப் மீயுசிக் என்ற பெயரில் இசைக்கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில் படித்த பழைய மாணவியான கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அன்னட்டி ஃபிலிப் (Annette Philip) என்பவர் Berklee Indian Ensemble  என்ற இசைக்குழுவை உருவாக்கி, அக்குழுவின் இயக்குநராக இருந்து வருகிறார். இக்குழுவினர் இந்திய இசையில் உருவான பாடல்களை பாடிவருகிறார்கள். அந்த வகையில் முதன் முதலாக இந்தியாவில் அதுவும் பெங்களூருவில் நடக்க உள்ள 54வது கணேஷ் உத்சவ் விழாவில், வருகின்ற 6ஆம் தேதி,  ஏ.ஆர். ரகுமான் பாடல்களை பாட உள்ளார்கள். பெங்களூருவிற்கு வந்துள்ள இந்த இசைக்குழுவில் ஒரு சில இந்திய வம்சாவழியினரைத் தவிர மற்ற அனைவரும்  வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.


சாம்பிளுக்காக இந்தக் குழுவினர் பாடிய பாடல்.