"பைரவா" படத்தில் நடிகர் விஜய் பாடிய துள்ளல் மிகுந்த காதல் பாடல்

01-11-2016
Monday (திங்கட்கிழமை)

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் "பைரவா" திரைப்படத்தில் துள்ளல் மிகுந்த காதல் பாடலை விஜய் பாடியுள்ளதாக தெரிகிறது. விஜய், தான் நடிக்கும் படத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடலையாவது பாடிடுவார். அந்தவகையில் இந்தப்பாடலும் இசையும் நன்றாக அமைந்துள்ளதாக தெரிகிறது. படத்திற்கான இசை சந்தோஷ் நாராயணன்.  இசை வெளியிட்டு விழா (Audio Launch) இந்த மாதம் அல்லது அடுத்த மாதம்  நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






இந்தியாவின் இசை கிராமம்

22-10-2016
Saturday (சனிக்கிழமை)

வயலின் மேதை அட்ரியாவுடன்  ஷெனாய் மேதை கிர்பால் சிங்


பொதுவாக, இசை என்பது நம்மில் பலருக்கு படிப்புக்கு அடுத்துதான். நம் நாட்டில், பெற்றோர்கள், குழந்தைகளுக்கு  2 வயது முதல் 9வது வகுப்பு படிக்கும் வரை இசையைக் கற்றுத்தருவார்கள். 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அச்சத்தோடு இசை பயிலுவதிலிருந்து  குழந்தைகளை நிறுத்திவிடுவார்கள். ஒரு சில மாணவ மாணவியர் பெற்றோர்களின் அனுமதியோடு 10வது பொதுத்தேர்வு இருந்தாலும், இசையையும் பயிலுவார்கள்.

ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் பைனி சாகிப் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக, ஒவ்வொரு குழந்தைக்கும் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படைகளை (Fundamentals) கற்றுத்தருகிறார்கள். எனவே, தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் உழவர்கள், கடை முதலாளிகள், வேலைபார்ப்போர் என்று அனைத்துதரப்பு மக்களும்  பாரம்பரிய ஹிந்துஸ்தானியின் அடிப்படைகளை தெரிந்து வைத்துள்ளார்கள். இசை, பைனி சாகிப் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது.

குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு நாளும், தங்களுடைய வீட்டுப் பாடங்களை முடித்த பின்னர் தாங்கள் பயிலுகின்ற இசைக் கருவியை எடுத்துக் கொண்டு இசைக்கென்று இருக்கும் அறைக்குள் நுழைவார்கள்.  அங்கே பல்வந்த் சிங் நம்தாரி காத்துக்கொண்டிருப்பார். பல்வந்த் சிங் தேர்ந்தெடுத்த பாரம்பரிய இசைப்பாடகர். இவர், குழந்தைகளுக்கு பாடுவதற்கு அல்லது இசைக்கருவியை இசைப்பதற்கு சொல்லிக்கொடுப்பதுமட்டுமல்லாமல், ராகங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார். காலையில் மற்றும் மாலையில் என்ன ராகம் பாடவேண்டும் மற்றும் இசை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைக்கு சர்வதேச அளவில் ஷெனாய் (Taar-Shehnai) வாசிப்பதில் புகழ் பெற்று விளங்கும் கிர்பால் சிங் (Kirpal Singh) இந்த கிராமத்திலிருந்து வந்தவர்தான்.


இப்படி இசையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக   பைனி சாகிப் (Bhaini Sahib village in Ludhiana district, Punjab State) கிராமம் திகழ்கிறது.  இசை தெரிந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய கிராமம் இது.




வானொலி உரையாடலுக்கு ஒப்பனை செய்து கொண்ட இருபெரும் ஜாம்பவான்கள்

14/10/2016
Firday (வெள்ளிக்கிழமை)

                 திரு.எம்.எஸ். உதயமூர்த்தி                                                     முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்


சென்னையில் நேற்று  நடைபெற்ற இலக்கிய விழாவில் தலைமையேற்று பேசிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கு நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்வை பேசும்போது குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு "நம் டீவி" என்ற தொலைக்காட்சி இருந்தது.  அதில் ஒய்வு பெற்ற வானொலி இயக்குநர் திரு. விஜய திருவேங்கடம் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அந்த தொலைக்காட்சிக்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை நேர்காணல் செய்வதற்காக முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை திரு.விஜய திருவேங்கடம் அழைத்தார். முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் சென்றார். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும் முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் பரஸ்பரம் விசாரித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். 5 நிமிடம் சென்றது, அவர்களைச் சுற்றி ஒளிப்பதிவு செய்வவதற்கு தேவையான காமிராக்கள் எதுவும் இல்லை. 10 நிமிடங்கள் சென்றது. நிலைமை மாறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் தங்களுக்கு ஒப்பனை செய்துவிட யாரும் வரவில்லையே என்று ஒருத்தொருக்கொருத்தார் விசாரித்துக்கொண்டார்கள்.  சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் இருவரும் ஒய்வறை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கு சென்று, அவர்களாகவே தங்களை ஒப்பனை செய்துகொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த திரு. விஜய திருவேங்கடம், மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், 6 மாதங்கள் கழித்துதான் நிகழ்சிகளை வீடியோ பதிவு செய்ய இருக்கிறோம் என்று சொன்னார். இதில் நகைச்சுவை என்னவென்றால், இருபெரும் ஜாம்பவான்களும், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், தொலைக்காட்சிக்கான நேர்காணல் அல்ல  என்று தெரியாமலேயே சுயமாக ஒப்பனை செய்துகொண்டார்கள்.





ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு உடல் நிலை சரியில்லை (Lataji not keeping well)

12-10-2016
Wednesday (புதன்கிழமை)

மும்பை:

லதா மங்கேஷ்கர்


பிரபல ஹிந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு உடல் நிலை சரியில்லை என்று மும்பையிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இத்தகவலை "சரிகம" தலைவர் சஞ்சீவ் கோயங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் லதா மங்கேஷ்கருக்கு  வரும் 20ந்தேதி நேரிடையாக சென்று வழங்கப்பட இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் மிக உயரிய விருதான "பங்காபிபூஷன்" விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.












இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்காக பாடிய ஹரிசரண்

09-10-2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)
பாடகர் ஹரிசரண்

ஹரிசரண், சென்னையைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய மொழிகளில் பாடிவரும் பிரபல பின்னணி பாடகர்.  தற்போது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் விளையாடும் கேரளா கால்பந்து குழுவை (Kerala Blasters Football Club) உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணி பாடகர் ஹரிசரண் ஒரு பாடலை பாடியுள்ளார்.  இப்பாடல் கேரள கால்பந்து ரசிகர்களிடையே வைரலாக பரவிவருகிறது. பாடலுக்கான வரிகளை மனு மஞ்சித் எழுதியுள்ளார். நிகில் ஆர். நாயர் இசையமைத்துள்ளார்.





ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளுக்கு இந்திரா சிவசைலம் விருது வழங்கப்பட்டது

08-10-2016
Thursday (சனிக்கிழமை)

Ranjani-Gayathri Sisters (ரஞ்சனி-காயத்ரிரி)
 கர்நாடக இசைப் பாடகிகளான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளுக்கு 2016ஆம் ஆண்டிற்கான இந்திரா-சிவசைலம் விருது நேற்று மியுசிக் அகாதெமியில் நடைபெற்ற சீர்மிகு விழாவில் வழங்கப்பட்டது. பின்னர் இருவரின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.                                                   
                                                           

விஜய்யின் அடுத்த படத்திற்கு இசை ஏ.ஆர். ரகுமான்?

06-10-2016
Thursday (வியாழக்கிழமை)



விஜய்யின் அடுத்த படத்திற்கு  ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பார் என்றும் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிப்பவர்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், படத்தை இயக்குபவர், தெறி படத்தை இயக்கிய அட்லி. விஜய்யின் "அழகிய தமிழ் மகன்" படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







கர்நாடகா போலிஸ் இசைக்குழுவின் மயக்கவைக்கும் இசை (Karnataka Police Band to mesmerize )

05-10-2016
Wednesday (புதன்கிழமை)

கர்நாடகா போலிஸ் இசைக்குழுவைச் சேர்ந்த 500 இசைக்கலைஞர்கள், வியாழக்கிழமையன்று (06-10-2016) மைசூருவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மைசூரு அரண்மனை முன்பு  பல்வேறு பாடல்களை வாசிக்க உள்ளனர். 

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, குறிப்பாக மைசூருவில் நடைபெற்றுவரும் நவராத்திரி எனும் தசரா பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். விழாவின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள போலிஸ் இசைக்குழுவில் வாசிக்கும் அனைத்து கலைஞர்களையும் ஒன்று திரட்டி வருகின்ற வியாழக்கிழமையன்று ஒரே நேரத்தில் அத்துனை கலைஞர்களையும் வாசிக்க வைக்க உள்ளனர். 

இந்த இசையில் கர்நாடக சங்கீத பாடல்கள், ஹிந்துஸ்தானி பாடல்கள் முதலியவற்றை இசைக்க உள்ளனர். 

வந்தே மாதரம் பாடலை கர்நாடகா போலிஸில் உள்ளள ஆங்கில இசைக்குழு வாசிக்க உள்ளது.  

நிகழ்ச்சியின் நிறைவாக  "சாரே ஜஹான்சே அச்சா (Saare Jahanse Accha) என்ற பாடலை வாசிக்க உள்ளனர். 




முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் புதிய இசை ஆல்பம்

05/10/2016
Wednesday (புதன்கிழமை)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் தற்போது, சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.  பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் கிஷோர்குமாரின் தீவிர ரசிகர். கிஷோர்குமார் பாடிய ரபீந்தரநாத்தின் பாடல்களைக் கேட்ட சஞ்சய், ரபீந்தரநாத்தின் 6 பாடல்களை தொகுத்து "அமர் பேலா ஜி ஜே" (Amar Bela Je Jay) என்று பெயரிட்டு  ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.  இதன் வெளியீட்டு விழா நேற்று கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவ்ரவ் கங்குலி ஆல்பத்தை வெளியிட்டார். 



"ஆண் தேவதை" படத்திற்கு இசை ஜிப்ரான்

03/10/2016
Monday (திங்கள்கிழமை)

"சென்னை டூ சிங்கப்பூர்" திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், "ஆண் தேவதை" என்ற படத்திற்கு இசையமைக்க தயாராகிவிட்டார்.
ஜிப்ரான்

இப்படத்தை இயக்குபவர் தாமிரா. இவர் மறைந்த திரைப்பட இயக்குநர் திரு. கே. பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர் சமுத்திரகனி மற்றும் ஜோக்கர் படப்புகழ் ரம்யா பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

எம்.எஸ் சுப்புலஷ்மிக்கு சிறப்பு தபால்தலை

03/10/2016
Monday (திங்கள்கிழமை)



பிரபல கர்நாடக இசைப்பாடகி மறைந்த திருமதி எம்.எஸ்.சுப்புலஷ்மியின் 100வது பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் ஐக்கியநாட்டு சபை (United Nations) சிறப்பு தபால்தலை (Special Stamp) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது, விழாவில் திருமதி. சுதா ரகுநாதனின் இசைக்கச்சேரி நடைபெற்றது. கச்சேரியில் ஏழு மொழிகளில் பாடி ரசிகர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.

நடிகர் மோகனுக்காக பாடிய பாடகர் கமல்

01/10/2016
Saturday (சனிக்கிழமை)

உலகநாயகன் கமல்ஹாசன், தான் நடிக்கும் படங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது பாடிவிடுவார். ஆனால், மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில், மிகவும் அரிதாக பின்னணி பாடுவார். அந்த வகையில் நடிகர் மோகனுக்காக இந்தப்பாடலை பாடியுள்ளார்


இந்தப்பாடலை கமல் பாடிய சூழல் மிகவும் சுவாரஸ்யமானது. இதைப்பற்றி, பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா அவர்களிடம் கேட்டோம்.  

இந்தப்பாடல் பிரசாத் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.  மெட்டுக்கு எழுதிய பாடல், முழுப்பாடலையும் எழுதி, இளையராஜாவிடம் காண்பித்தேன், பாடல் வரிகள் நன்றாக உள்ளது என்று சொல்லி இசையமைக்கத் தொடங்கினார். பாடலுக்கான முழு இசைச்சேர்ப்பு பணி முடிந்தது. யாரை பாட வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக கமல் இளையராஜாவை பார்க்க உள்ளே வந்து கொண்டிருந்தார், இதை கவனித்த இளையராஜா, கமலை ட்ராக் பாட வைப்போம் என்று சொன்னார்.  நானும் சரி என்று சொன்னேன். ட்ராக்கில் பதிவு செய்த பாடலை கேட்டோம். கமல் பாடியதே நன்றாக உள்ளது என்று நான் சொன்னேன். நான் இதைச் சொன்ன போது கமல் இல்லை. அதற்கு இளையராஜா, இல்ல, முன்னணி பாடகர்  பாடினா இன்னும் நன்றாக இருக்கும் என்றார். 

ஒரு சில மணி நேரம் கழித்து, கமல் பாடியதையே வச்சுக்குவோம், நன்றாக பாடியுள்ளார், மேலும், முன்னணி பாடகரின் குரல் உலகம் அறிந்தது. இந்தப்பாட்டிற்கு கமலின் குரல் வித்தியாசமாக உள்ளது என்றேன்.

அதற்கு இளையராஜா, கமல் பாடியதையே வச்சுக்கலாம்னு சொல்றீங்க, அப்படித்தானே, சரி கமல் பாடியதையே வச்சுக்குவோம் என்றார். 

இப்படித்தான் இந்தப் பாடலை அன்பு நண்பர் கமல் பாடினார் என்றார் கவிஞர் மு.மேத்தா. 

இளையராஜவின் இசையில் "பொன்மானை தேடுதே" பாடல் 80களில் மட்டுமல்ல இன்றும் கூட சூப்பர் ஹிட் பாடலாகும். கேட்டுப்பாருங்களேன்.