லண்டல் ஒலிம்பிக்ஸில் கீ போர்டு வாசித்த மிஸ்டர் பீன்

23/08/16


2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஒரு வழியாக முடிந்து விட்டது.  ஆனால் இதற்கு முன்பு 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், லண்டன் ஃபில்ஹாஹார்மோனிக் குழுவினருடன் இணைந்து, மிஸ்டர் பீன் கீ போர்டு வாசித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். இதோ அந்த வீடியோ.


ஒரு செல்லோவை 4 கலைஞர்கள் வாசிக்கும் புதுமை

23/08/2016

வீயன்னா ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவைச் சேர்ந்த நான்கு கலைஞர்கள் ஒரு செல்லோவை வாசிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதோ அந்த வீடியோ பதிவு.


ஜாஸ் மியுசிக் வாசித்த உராங்குட்டான் என்ற மனிதக் குரங்கு

21/08/2016

ஆஸ்திரிலேயாவின் அடிலெய்ட் நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் உராங்குட்டான் என்ற மனிதக்ரங்கு  ஐ போனில் பியானொவும் ட்ரம்ஸையும் வாசித்து அசத்தியுள்ளது.

க்ளுயெட் (Kluet) என்ற மனிதக் குரங்கு வாசித்த இசைக்கு "Give me a clue" பெயரிடப்பட்டுள்ளது. மனிதக் குரங்கு வாசித்த இசையை உலக உராங்குட்டான் தினத்தன்று வெளியிட்டுள்ளார்கள். இதில் வரும் நிதி மிருகக் காட்சி சாலையில் உள்ள 3 உராங்குட்டான்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கும். கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் வீடியோவை பாருங்கள்.

http://www.newshub.co.nz/world/adelaide-zoo-orangutan-composes-jazz-music-on-iphone-2016082113


93 வயதில் வயலின் வாசிக்கும் கலைஞர்

20/08/2016


இசைக்கு வயதில்லை, ஆம்,  வயலின் மேதை ஐவரி கிட்லிஸ் (Ivory Gitlis). 93 வயதிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் வயலினை வாசித்து ரசிகர்களின் கரவொலியைப் பெற்றுள்ளார். 

1922ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில், ஹைஃபா என்ற இடத்தில் பிறந்த ஐவரி கிட்லிஸ்,  லண்டன் பில்ஹார்மோனி, நீயுயார்க் பில்ஹார்மோனி, பெர்லின் பில்ஹார்மோனி மற்றும் வீயன்னா பில்ஹார்மோனி போன்ற புகழ்பெற்ற இசைக்குழுவில் வாசித்துள்ளார். இது தவிர ஆயிரக்கணக்கான தனிப்பட்ட ஆல்பங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். இதோ, சமீபத்தில்  ஐவரி வாசித்த வீடியோ பதிவு.


ஐவரி தன்னுடைய வயலினில் புதுப்புது இசையை நமக்கு தர, அவருக்கு நீண்ட ஆயுளை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.




ஒரு புல்லாங்குழலை வாசிக்கும் இருவர்

18 August 2016


புல்லாங்குழல் இசைக்கருவியை ஒருவர்தான் வாசிக்க முடியும், எப்படியென்றால், புல்லாங்குழலில் இருக்கும் ஒரு துளையில் ஊதுவார். மற்ற துளைகளில் விரல்களை மாற்றி மாற்றி வைத்து இசையைத் தருவார். மேலும், புல்லாங்குழல் வாசிக்கும்  இசைக் கலைஞர்  பல்வேறு இசை தரும் புல்லாங்குழல்களையும் வைத்திருப்பார். ஆனால், இங்கே, ஒருமாணவி பியானோவும் வாசிக்கின்றார், அதே சமயம், புல்லாங்குழலில் உள்ள துளையில் ஊதுகிறார். மற்றொரு மாணவி, புல்லாங்குழலில் உள்ள மற்ற துளைகளில் விரல்களை மாற்றி மாற்றி வைத்து இசையைக் கொடுக்கிறார். பியானோ வாசிப்பவர் பெயர் நிகோலினா சுஷக். புல்லாங்குழல் வாசிப்பவர் பெயர் ஏரியானா. இருவருமே போஸ்னியா நாட்டின் தலைநகரான ஜரஜெவோவில் இசைப் பல்கலைகழகத்தில் படிக்கின்றார்கள். இதோ அந்த வீடியோ பதிவு.


நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் சாதக மந்திரம்

18 August 2016
டி.என். ராஜரத்தினம்  பிள்ளை

நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என். ராஜரத்திதினம் பிள்ளையின் 119வது பிறந்த நாள் இந்த மாதம் 27ஆம் தேதி ஆகும். அவரைப் பற்றி விரிவாக அவரது பிறந்த நாளன்று சில தகவல்களை பதிவு செய்ய உள்ளோம்.  அதற்கு முன்னோட்டமாக ஒரே ஒரு தகவலை மட்டும் இன்று பதிவு செய்வோம். நாதஸ்வர சக்ரவர்த்தி, வயதான காலத்தில் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து சாதகம் செய்வாராம். 'இந்த வயதிலும் இது தேவையா? என்று கேட்ட போது, 'தேவைதான், ஒரு நாள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் சின்ன சின்ன குறைபாடுகள் எனக்கே தெரியும்.  இரண்டு நாள் சாதகம் செய்யவில்லை என்றால்,  என்னைப் போன்ற விதவான்களுக்கு தெரியும். மூன்று நாட்கள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் விஷயம் புரிந்து ரசிகர்களுக்கு அது தெரிந்துவிடும்.  கலைஞன் என்பவன் தினமும் சாதகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றாராம். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு வழி காட்டுதல் ஆகும். 

5 முழு தேசிய கீதம் கொண்ட வீடியோ

15 August 2016



இன்று இந்தியாவின் 70தாவது சுதந்திர தினம்.  இந்த தினத்தை போற்றும் வகையில் "சரிகம" நிறுவனமும் புகழ்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் இணைந்து  ரபீந்தரநாத் தாகூர் எழுதிய முழு தேசிய கீத பாடலை, நமது இந்திய நாட்டின் புகழ்பெற்ற 39 இசை வித்வான்களைக் கொண்டு பாட வைத்து 10 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதில் நமக்கு அறிமுகமான டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா, நித்யஸ்ரீ மகாதேவன், பி. சுசிலா, சித்ரா, ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்.  ரபீந்தரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் 5 பாடல்களைக் கொண்டதாகும், அதில் ஒரு பாடலை மட்டும்தான் நாம் பள்ளிகளில் பாடுகிறோம். இதோ, கீழே 5 பாடல்களை கொண்ட அந்த வீடியோ.




பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அகால மரணம்

14 August 2016
                                     1975-2016

கவிஞர் நா. முத்துக்குமாரின் மரணச் செய்தியைக் கேட்டதும், கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவருடன் அந்த அளவுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும், ஒரு முறை, கவிஞர் அறிவுமதியின் அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் நா. முத்துக்குமாரின் பல பாடல்கள் என்னை அதிகம் பாதித்துள்ளது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 'தங்கமீன்கள்' படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடல் மற்றும் "சைவம்" படத்தில் வருகின்ற "அழகே எதுவும் அழகே"  பாடல். தமிழர்களின் உள் மனதில் நா. முத்துக்குமாரின் யதார்த்தமான பாடல்கள் ஆழமாக பதிந்து விட்டது என்றே சொல்லலாம். 

கவிஞர் அறிவுமதியின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம். ஒரு முறை நானும், என்னுடைய தமிழ் ஆசான் முனைவர் திரு. சுந்தர ஆவுடையப்பன் அவர்களும் ஒரு நிகழ்வுக்காக கவிஞர் அறிவுமதியிடம் கவிதை எழுதி வாங்க தி.நகரில் உள்ள அறிவுமதியின் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது, இன்னொரு நாற்காலியில் இளம் கவிஞர் நா.முத்துக்குமார் உட்கார்ந்திருந்தார். கவிஞர் அறிவுமதி, எங்களுக்கு,  பின்னாளில் சாதனை செய்யப்போகும் கவிஞரை அறிமுகப்படுத்தி வைத்து, இவர், வளர்ந்து வரும் கவிஞர், இவரிடமும் கவிதை எழுதி வாங்குங்கள் என்றார். சரி என்று நா. முத்துக்குமாரிடமும் எழுதி வாங்கினோம். 

கவிஞர் முத்துக்குமார் இயக்குநராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். இயக்கத்தில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.  ஆனால், அவருக்கு புகழ் சேர்த்தது கவிதைகளும், திரைப்படபாடல்களும்தான். இயக்கத்தைப் பற்றிய சிறு போதை அவரிடம் இருந்தது. அதற்கு அச்சாரமாய் இயக்குநர் ஏ.எல், விஜய் இயக்கிய கீரிடம் படத்தில் விஜய்யோடு சேர்ந்து வசனம் எழுதியிருப்பார். இப்படி தன்னுடைய சினிமா பயணத்தை படிப்படியாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால், காலகன் அவருடைய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான். அவர் மறைந்தாலும், அவர் தமிழ்த்திரை உலகத்திற்கு தந்த பாடல்களும் மற்றும் கவிதை தொகுப்புகளும் தமிழ் இருக்கும்வரை தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


தமிழ் இசையமைப்பாளர்களுக்கு உத்வேகம் (Inspiration) தந்த ஹிந்திப் பாடல்கள்

13 August 2016


பொதுவாக,  தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களிடம், இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்கள்  மாற்று மொழியில் ஹிட்டான பாடல்கள் மாதிரியே வேணும் என்று சொல்வார்கள். இசையமைப்பாளர்களும் அந்தப் பாடல் மாதிரியோ அல்லது அந்த பாடலின் சாயல் வராத அளவிற்கோ பாடலுக்கு  இசையமைத்துக்  கொடுப்பார்கள்.

அந்த வகையில் கீழே உள்ள ஹிந்திப் பாடல்களையும் அதற்கு சமமான தமிழ்ப் பாடல்களையும்  கேட்டுப் பாருங்கள்.





முதலாவதாக கேட்ட ஹிந்திப் பாடல் "Aa Gale Lag Jaa" என்ற ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற பாடல்.  இந்தப் படம் 1971ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்திக் கதையை தமிழில் எடுப்பதற்காக,  தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மறைந்த
வி.பி. ராஜேந்திர பிரசாத், அந்த கதையின் உரிமையை வாங்கி தமிழில் "உத்தமன்" என்ற பெயரில்  படமாக்கினார். இந்தப்  படத்தில் சிவாஜி, மஞ்சுளா, பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கான வசனத்தை திரு. பாலமுருகன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சம்மந்தமாக திரு. பாலமுருகனிடம்  கேட்ட போது, பாடல் கம்போசிங் நடந்த போது, இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் ஹிந்திப் பாடல்கள் முழுவதையும் கேட்டார்.  குறிப்பிட்ட "கேளாய் மகனே" பாடலின் ஹிந்தி இசையமப்பு மிகவும் பிடித்திருந்தது. உடனே கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து, உடனே பாடல் வரிகள் தர முடியுமா எனக்கேட்டார், உடனே கவிஞரும், தாமதமில்லாமல் பாடல் வரிகளை கொடுத்தார். அனைத்து வரிகளும் தத்துவமாக இருந்ததாலும் இசைக்கு பொருந்தியதாலும், ஹிந்தி இசையை அப்படியே வைத்துக் கொண்டோம் என்றார் திரு. பாலமுருகன்.  அது சரி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மறைந்த வி.பி. ராஜேந்திர பிரசாத் யார் எனத் தெரியுமா? தற்போதய தெலுங்கு முண்ணனி நடிகரும் லிங்கா படத்தில் வில்லனுமான திரு. ஜெகபதி பாபுவின் தந்தையாவார். தமிழில் உத்தமன், பட்டாகத்தி பைரவன் மற்றும் எங்கள் தங்க ராஜா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்.

"சீப் த்ரில்ஸ்" (Cheap Thrills) ஆங்கிலப் பாடலை வீணையில் வாசிக்கும் கனடா சகோதரிகள்

8  August 2016

கனடா நாட்டில் வசிக்கும் ஆதி மற்றும் ஆரா தம்பயப்பா சகோதரிகள் இந்தியாவில் பாரம்பரிய வாத்தியமான வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். அதிலும் ஆங்கிலப் பாடல்கள், ஹிந்தி மற்றும் தமிழ் திரை இசைப்பாடல்களை இசை நுட்பத்தோடு வாசிக்கிறார்கள். சமீபத்தில், இந்த இரட்டையர்கள்,  பிரபல ஆஸ்திரிலேய பாடகரான சியா (Sia) பாடிய 'சீப் த்ரில்ஸ்' என்ற பாடலை வீணையில் வாசித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், 'கபாலி' படத்தில் இடம்பெற்றுள்ள நெருப்புடா பாடலையும் வாசித்துள்ளனர். பொதுவாக, நெருப்புடா பாடலில் கிடார் இசை அதிகமாக இருக்கும். கிடாரில் வாசிக்கும் இசையை வீணையில் வாசிப்பது எளிதான விஷயமல்ல. ஆனால், கனடா சகோதரிகள் மிகவும் அழகாக வாசித்துள்ளார்கள். வளர்ந்து வரும் இச் சகோதரிகள் இசையில் புதிய இசையை தர வேண்டும் என வாழ்த்துவோம்.  


மேலே சகோதரிகள் வீணையில் வாசித்த ஆங்கிலப் பாடல் இதோ கீழே


ஆதி மற்றும் ஆரா சகோதரிகளின் மின்னஞ்ச முகவரி: 
veenathambiappah@gmail.com

கிராமி விருதுக்கு செல்லும் காயத்ரி மந்திரம்

6 August 2016

பப்பி லஹரி

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் திரு. பப்பி லஹரி, 1980 மற்றும் 90களில், தனது இசையால் ஹிந்தி திரைப்பட உலகத்தை கோலோச்சியவர். 'தாய் வீடு' மற்றும் 'பாடும் வானம்பாடி' போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமையத்தவர். 'கருப்பம்பட்டி' என்ற தமிழ் படத்தில் கண்ணன் இசையில் ஒரு பாட்டு பாடியுள்ளார், தொடர்ந்து பல மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இது தவிர தனிப் பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டு வருகிறார்.  சமீபத்தில், சமஸ்கிருதத்தில் இருக்கும் காயத்ரி மந்திர ஸ்லோகத்திற்கும் மற்றும் புத்த ஸ்லோகத்திற்கும் இசையமைத்துள்ளார். பப்பி லஹரி இசையில் வெளிவந்துள்ள இந்த தனி ஆல்பத்தை கிராமி விருது தேர்வுக்குழுவுக்கு அனுப்ப உள்ளார். கிராமி விருதுக்கு ஏன்? அனுப்பப்படுகிறது என்பதற்கு லஹரி சொல்லும் காரணம், வெளிநடுகளில் இந்த மாதிரியான சான்டிங் (chanting) ஆல்பத்தை பெரிதும் விரும்புகிறார்கள், உதாரணத்திற்கு உலகின் நம்பர் 1 பாப் பாடகரான டினா டர்னர் (Tina Turner)  "ஸர்வேஸாம் ஸ்வஸ்டிர் பவது' என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியுபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளளது என்கிறார் பப்பி லஹரி.

சமீபத்தில்,பப்பி லஹரி தயாரித்த 'Slum Stars' (ஸ்லம் ஸ்டார்ஸ்) என்ற குறும் பாடம் சர்வதேச சினிமா விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளது. 

பப்பி லஹரி,காயத்ரி மந்திர இசையமைப்பை கிராமிய விருதுக்கு அனுப்பட்டும் வாழ்த்துகள். அது ஒருபுறம் இருக்க டினா டர்னர் (Tina Turner) பாடிய ஸர்வேஸாம் பாடலை கேளுங்கள்.  புகழ்பெற்ற ஆங்கிலப் பாடகியான டினா டர்னர் (Tina Turner) நமது நாட்டின் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் இருக்கும் ஒரு பாடலை மிக அருமையாக பாடியுள்ளார். ஆனால், இந்தியர்களாகிய நம்மில் ஒரு சாரார்,அழிந்து வரும் சம்ஸ்கிருதத்தை படிக்கவே கூடாது என்று அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, அழிந்து வரும் சமஸ்கிருத மொழியை வேறோரு நாட்டினர் வளர்க்கின்றனரே அது வரைக்கும் மகிழ்ச்சி. இப்போது அந்தப் பாடலை கேளுங்கள்


ஏ.ஆர். ரகுமான் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைத்த அருமையான பாடல்

4 August 2016

இன்று அதிகாலை காலை நாளிதழ்களை படித்துக் கொண்டிடிருந்த போது, மணி 5.45 இருக்கும், எனது பள்ளித் தோழன் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன், ஒரு பாடலை பாடி, இந்தப் பாடலின் முழு விவரங்களை சொல்லு என்றார். அந்தப் பாடல் மிகவும் அருமையான பாடல். 1970 மற்றும் 80களில் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.  திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம், தனது இளமைக் குரலில்  அருமையாகப் பாடியிருப்பார். பாடலுக்கு முன்பு அவர் கொடுக்கும் ஹம்மிங் மிகவும் அற்புதமாக இருக்கும். அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.  பாடலைப் பற்றிய விவரங்களை பாடலுக்கு கீழே தருகிறேன்.




பாடல் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக கூகுள் பண்ணிப் பார்த்தேன், விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு விவரம் கிடைத்தது, ஆனால், அது உறுதியாக பதிவு செய்யப்படவில்லை. பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்று மட்டும் தெரியவந்தது. உடனே கவிஞர் திரு. முத்துலிங்கத்தை தொடர்பு கொண்டு கவிஞரின் கைப்பேசி எண்ணை வாங்கி 
திரு. பூவை செங்குட்டுவனை தொடர்பு கொண்டு, "காலம் எனக்கொரு பாட்டெழுதும் என்ற பாடலை எழுதியவர் நீங்கள்தானா என்று கேட்டேன். அதற்கு கவிஞர், இந்தப் பாடலை எழுதியது நான்தான் என்று சொன்னார். அதற்கு நான், இந்தப் பாடலைப் பற்றிய முழு விவரங்களை சொல்லுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு கவிஞர், இந்தப் பாடல் "பௌர்ணமி" என்ற படத்திற்காக எழுதப்பட்டது. இந்தப் படத்தை தயாரித்தவர் ஒரு நடன இயக்குநர். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம். மூன்றே மூன்று நாட்கள்தான் ஓடியது.  இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ராஜகோபால் குலசேகர் என்கிற ஆர்.கே. சேகர், இவர், இன்றய  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானின்  தந்தை.
இசை தொகுப்பாளர், உதவி இசை அமைப்பாளர்,இசை அமைப்பாளர் என பல பணிகள்.தக்ஷினாமூர்த்தி, வி. குமார் என்று பலருக்கும் உதவியாளராக இருந்துள்ளார். மலையாளத்தில் 53 படங்களுக்கு இசையமைத்துள்ளார் 1964ல் தொடங்கி 1976 வரை.முதல் படம் பழசி ராஜா (1964).  தமிழில் 'நாணல்' மற்றும் நீர்க்குமிழி' போன்ற தமிழ் படங்களுக்கு மறைந்த இசையமைப்பாளர் திரு. வி. குமாருக்கு உதவி இசையமப்பாளராக பணிபுரிந்துள்ளார்.  
'பௌர்ணமி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், விருகம்பாக்கத்தில் இருந்த கோல்டன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மெட்டுக்கு எழுதப்பட்ட இந்தப் பாடலை பாடிய திரு. எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.300/-

ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனுக்கு டிஸ்கோ பாடல்கள் பிடிக்குமா?

August 2 2016

இந்திய திரை இசை உலகில் எஸ்.டி. பர்மன்(தந்தை) மற்றும் ஆர்.டி. பர்மன் (மகன்) என்று சொன்னால் தெரியாதவர்கள் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, ஹிந்தி திரை இசை உலகில் கொடி கட்டி பறந்தார்கள். இருவருமே இன்று உயிரோடு இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் கூட, மொழி தெரியாவிட்டாலும், ஹிந்தி திரைப்பட பாடல்களை, குறிப்பாக அதன் இசையை ரசித்தார்கள். அப்படிபட்ட இசையை தந்தவர்களுள் ஆர்.டி. பர்மன் குறிப்பிடதக்கவர்.

ஆர்.டி.பர்மனைப் பற்றி "ஆர்.டி.பர்மானியா" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் வெளி வந்துள்ளது. இப்புத்தகத்தை மும்பையில் உள்ள முது பெரும் பத்திரிக்கையாளர் திரு. சைதன்ய படுகோனே எழுதியுள்ளார். 

ஆர்.டி.பர்மனுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? ஆர்.டி.பர்மன் ஒரு முறை திரு. சைதன்யா வீட்டில் உள்ள தொலைபேசியில் அழைத்துள்ளார். போனை எடுத்தவர் சைதன்யாவின் அப்பா,  அப்பாவிடம் ஆர்.டி.பர்மன் என்ன? சொன்னார் என்பதையெல்லாம் அப்புத்தகத்தில் சொல்லியுள்ளார். 

இசையமப்பாளராக அறிமுகமானதிலிருந்து, 20 தடவை பிலிம் ஃபேர் விருதுக்கு அவர் இசையமைத்த படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இருபது வருடங்கள் கழித்துதான் அவர் இசையமத்த "சனம் தேரி கசம்' (Sanam Teri Kasam) என்ற ஹிந்தி படத்திற்கு கிடைத்தது.  இரண்டாவதாக 'மசூம்' (Masoom) என்ற படத்திற்கு கிடைத்தது.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கிடைக்காமல் போன ஃபிலிம் பேர் விருது "சனம் தேரி கசம்" படத்திற்கு கிடைத்த போது ஆர்.டி.பர்மன் சந்தோஷமடையவில்லை. ஏனென்றால், அந்தப் படத்தில் எல்லாப் பாடல்கமே மேற்கத்திய இசையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், 'மசூம்' படத்திற்கு பிலிம் ஃபேர் விருது கிடைத்த போது ஆர்.டி.பர்மனுக்கு அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதோ அந்தப் பாட்டு



மேலும், இந்தப் பாட்டை பாடிய ஆர்த்தி முகர்ஜிக்கு, 1983ஆம் ஆண்டிற்கான , சிறந்த பாடகிக்கான 31வது பிலிம் ஃபேர் விருதும் மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது. (ஆர்.டி. பர்மனை பற்றிய மேலும் பல  சுவாரஸ்யமான தகவல்கள் நாளை) 

"சென்னை டூ சிங்கப்பூர்" படத்தின் பாடல்கள் 6 ஆறு நாடுகளில் வெளியீடு

1 August 2016



"உத்தம வில்லன்" படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் "சென்னை டூ சிங்கப்பூர்" என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழாவை 6 நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர் இப்படத்திற்கான தயாரிப்பாளர்கள்.

இப்படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள், எனவே இசை வெளியிட்டு விழாவை புதுமையாக நடத்த ஒவ்வொருத்தரும் தங்களுடைய வித்தியாசமான எண்ணங்களை சொன்னார்கள், அப்படி வந்ததுதான், இந்த ஐடியா என்கிறார் ஜிப்ரான். 

மியான்மார், தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் என 6 நாடுகளில் ஆன் லைன் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்டு 12 சென்னையிலிருந்து கிளம்புகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை எடிட்டர் கே.எல். ப்ரவின் இயக்குநராக இருக்கும் காமிக்லுக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியும் மற்றும் சிங்கப்பூர் டெவலெப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து தாயாரிக்கின்றனர்.