நடிகர் மோகனுக்காக பாடிய பாடகர் கமல்

01/10/2016
Saturday (சனிக்கிழமை)

உலகநாயகன் கமல்ஹாசன், தான் நடிக்கும் படங்களில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது பாடிவிடுவார். ஆனால், மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில், மிகவும் அரிதாக பின்னணி பாடுவார். அந்த வகையில் நடிகர் மோகனுக்காக இந்தப்பாடலை பாடியுள்ளார்


இந்தப்பாடலை கமல் பாடிய சூழல் மிகவும் சுவாரஸ்யமானது. இதைப்பற்றி, பாடலை எழுதிய கவிஞர் மு.மேத்தா அவர்களிடம் கேட்டோம்.  

இந்தப்பாடல் பிரசாத் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.  மெட்டுக்கு எழுதிய பாடல், முழுப்பாடலையும் எழுதி, இளையராஜாவிடம் காண்பித்தேன், பாடல் வரிகள் நன்றாக உள்ளது என்று சொல்லி இசையமைக்கத் தொடங்கினார். பாடலுக்கான முழு இசைச்சேர்ப்பு பணி முடிந்தது. யாரை பாட வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக கமல் இளையராஜாவை பார்க்க உள்ளே வந்து கொண்டிருந்தார், இதை கவனித்த இளையராஜா, கமலை ட்ராக் பாட வைப்போம் என்று சொன்னார்.  நானும் சரி என்று சொன்னேன். ட்ராக்கில் பதிவு செய்த பாடலை கேட்டோம். கமல் பாடியதே நன்றாக உள்ளது என்று நான் சொன்னேன். நான் இதைச் சொன்ன போது கமல் இல்லை. அதற்கு இளையராஜா, இல்ல, முன்னணி பாடகர்  பாடினா இன்னும் நன்றாக இருக்கும் என்றார். 

ஒரு சில மணி நேரம் கழித்து, கமல் பாடியதையே வச்சுக்குவோம், நன்றாக பாடியுள்ளார், மேலும், முன்னணி பாடகரின் குரல் உலகம் அறிந்தது. இந்தப்பாட்டிற்கு கமலின் குரல் வித்தியாசமாக உள்ளது என்றேன்.

அதற்கு இளையராஜா, கமல் பாடியதையே வச்சுக்கலாம்னு சொல்றீங்க, அப்படித்தானே, சரி கமல் பாடியதையே வச்சுக்குவோம் என்றார். 

இப்படித்தான் இந்தப் பாடலை அன்பு நண்பர் கமல் பாடினார் என்றார் கவிஞர் மு.மேத்தா. 

இளையராஜவின் இசையில் "பொன்மானை தேடுதே" பாடல் 80களில் மட்டுமல்ல இன்றும் கூட சூப்பர் ஹிட் பாடலாகும். கேட்டுப்பாருங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக