இந்தியாவின் இசை கிராமம்

22-10-2016
Saturday (சனிக்கிழமை)

வயலின் மேதை அட்ரியாவுடன்  ஷெனாய் மேதை கிர்பால் சிங்


பொதுவாக, இசை என்பது நம்மில் பலருக்கு படிப்புக்கு அடுத்துதான். நம் நாட்டில், பெற்றோர்கள், குழந்தைகளுக்கு  2 வயது முதல் 9வது வகுப்பு படிக்கும் வரை இசையைக் கற்றுத்தருவார்கள். 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அச்சத்தோடு இசை பயிலுவதிலிருந்து  குழந்தைகளை நிறுத்திவிடுவார்கள். ஒரு சில மாணவ மாணவியர் பெற்றோர்களின் அனுமதியோடு 10வது பொதுத்தேர்வு இருந்தாலும், இசையையும் பயிலுவார்கள்.

ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் பைனி சாகிப் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக, ஒவ்வொரு குழந்தைக்கும் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படைகளை (Fundamentals) கற்றுத்தருகிறார்கள். எனவே, தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் உழவர்கள், கடை முதலாளிகள், வேலைபார்ப்போர் என்று அனைத்துதரப்பு மக்களும்  பாரம்பரிய ஹிந்துஸ்தானியின் அடிப்படைகளை தெரிந்து வைத்துள்ளார்கள். இசை, பைனி சாகிப் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது.

குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு நாளும், தங்களுடைய வீட்டுப் பாடங்களை முடித்த பின்னர் தாங்கள் பயிலுகின்ற இசைக் கருவியை எடுத்துக் கொண்டு இசைக்கென்று இருக்கும் அறைக்குள் நுழைவார்கள்.  அங்கே பல்வந்த் சிங் நம்தாரி காத்துக்கொண்டிருப்பார். பல்வந்த் சிங் தேர்ந்தெடுத்த பாரம்பரிய இசைப்பாடகர். இவர், குழந்தைகளுக்கு பாடுவதற்கு அல்லது இசைக்கருவியை இசைப்பதற்கு சொல்லிக்கொடுப்பதுமட்டுமல்லாமல், ராகங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார். காலையில் மற்றும் மாலையில் என்ன ராகம் பாடவேண்டும் மற்றும் இசை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைக்கு சர்வதேச அளவில் ஷெனாய் (Taar-Shehnai) வாசிப்பதில் புகழ் பெற்று விளங்கும் கிர்பால் சிங் (Kirpal Singh) இந்த கிராமத்திலிருந்து வந்தவர்தான்.


இப்படி இசையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக   பைனி சாகிப் (Bhaini Sahib village in Ludhiana district, Punjab State) கிராமம் திகழ்கிறது.  இசை தெரிந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக செல்லவேண்டிய கிராமம் இது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக