பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அகால மரணம்

14 August 2016
                                     1975-2016

கவிஞர் நா. முத்துக்குமாரின் மரணச் செய்தியைக் கேட்டதும், கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவருடன் அந்த அளவுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும், ஒரு முறை, கவிஞர் அறிவுமதியின் அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் நா. முத்துக்குமாரின் பல பாடல்கள் என்னை அதிகம் பாதித்துள்ளது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 'தங்கமீன்கள்' படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடல் மற்றும் "சைவம்" படத்தில் வருகின்ற "அழகே எதுவும் அழகே"  பாடல். தமிழர்களின் உள் மனதில் நா. முத்துக்குமாரின் யதார்த்தமான பாடல்கள் ஆழமாக பதிந்து விட்டது என்றே சொல்லலாம். 

கவிஞர் அறிவுமதியின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம். ஒரு முறை நானும், என்னுடைய தமிழ் ஆசான் முனைவர் திரு. சுந்தர ஆவுடையப்பன் அவர்களும் ஒரு நிகழ்வுக்காக கவிஞர் அறிவுமதியிடம் கவிதை எழுதி வாங்க தி.நகரில் உள்ள அறிவுமதியின் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது, இன்னொரு நாற்காலியில் இளம் கவிஞர் நா.முத்துக்குமார் உட்கார்ந்திருந்தார். கவிஞர் அறிவுமதி, எங்களுக்கு,  பின்னாளில் சாதனை செய்யப்போகும் கவிஞரை அறிமுகப்படுத்தி வைத்து, இவர், வளர்ந்து வரும் கவிஞர், இவரிடமும் கவிதை எழுதி வாங்குங்கள் என்றார். சரி என்று நா. முத்துக்குமாரிடமும் எழுதி வாங்கினோம். 

கவிஞர் முத்துக்குமார் இயக்குநராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். இயக்கத்தில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.  ஆனால், அவருக்கு புகழ் சேர்த்தது கவிதைகளும், திரைப்படபாடல்களும்தான். இயக்கத்தைப் பற்றிய சிறு போதை அவரிடம் இருந்தது. அதற்கு அச்சாரமாய் இயக்குநர் ஏ.எல், விஜய் இயக்கிய கீரிடம் படத்தில் விஜய்யோடு சேர்ந்து வசனம் எழுதியிருப்பார். இப்படி தன்னுடைய சினிமா பயணத்தை படிப்படியாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால், காலகன் அவருடைய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான். அவர் மறைந்தாலும், அவர் தமிழ்த்திரை உலகத்திற்கு தந்த பாடல்களும் மற்றும் கவிதை தொகுப்புகளும் தமிழ் இருக்கும்வரை தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக