இரு கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு இன்று பிறந்தநாள்

06/09/2016
Tuesday (செவ்வாய்க்கிழமை)


                                  திருமதி. நீலா                                               திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபன்
                    (புல்லாங்குழல் இசைக் கலைஞர்)                                (வீணை இசைக் கலைஞர்)





திருமதி. நீலா
(புல்லாங்குழல் கலைஞர்)


இன்று, புல்லாங்குழல் கலைஞர் திருமதி. நீலா அவர்களுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் கொண்டாடும் திருமதி. நீலாவிற்கு "ராகமாலிகா" தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக இசை  உலகில் சிக்கில் சகோதரிகளை (Sikkil Sisters) தெரியாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக புல்லாங்குழல் வாசிப்பது கடினமானது. அதுவும் பெண்கள் புல்லாங்குழல் வாசிப்பது என்பது மிகவும் கடினமானது.

திருமதி. நீலா பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் மற்றும்  தன்னுடைய விடாமுயற்சியினாலும் புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். சிக்கில் சகோதரிகளில்  திருமதி. நீலா இளைய சகோதரி.  திருமதி. நீலாவுக்கு 7 வயாதாக இருக்கும் போது, புல்லாங்குழல் வாசிக்கும் பயிற்சியை தொடங்கினார். சரளி வரிசையைக்  கற்றுக்கொள்ள 1-1/2 வருடங்கள் ஆனது. இவருடைய புல்லாங்குழல் வாசிப்பு அரங்கேற்றம் சிக்கில் சிங்காரவேலர் கோவிலில் நடந்தது. இவருடைய அரங்கேற்ற  வாசிப்புக்கு ராமு பாகவதர் வயலினும் இவருடைய தந்தை மிருதங்கமும் வாசித்தனர். 1953ஆம் ஆண்டு, தஞ்சாவூர் காசி விஸ்வநாதர் கோவிலில், சிக்கில் சகோதரிகளாக தங்களது புல்லாங்குழல் இசைப் பயணத்தை தொடங்கினர் திருமதி. குஞ்சுமணியும் மற்றும் திருமதி நீலாவும். இந்தக் கச்சேரிதான் இருவரின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர்களது வாழ்வில் வசந்தம் வீச்த் தொடங்கியது. 

திருமதி. நீலாவிற்கு ஒரே புதல்வி, அவரும் மிகச்சிறந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர், பெயர், திருமதி.  மாலா சந்திரசேகர். திருமதி. நீலாவின் உறவினர் மறைந்த புல்லாங்குழல் கலைஞர் திரு. ந. ரமணி.

திருமதி. நீலா வாங்கிய விருதுகள்:

1. கலைமாமணி                              -    1973ஆம் ஆண்டு
2. சங்கீத நாடக அகாதமி             -    1989ஆம் ஆண்டு
3. சங்கீத கலாநிதி                           -    2002ஆம் ஆண்டு

இவர்கள் பெற்ற விருதுகளில் சங்கீத நாடக அகாதமி விருது சிறப்பான ஒன்றாகும். சங்கீத நாடக அகாதமி ஆரம்பித்தது முதல் இதுவரை 9 புல்லாங்குழல் கலைஞர்களுக்கு விருதுகள் தரப்பட்டுள்ளன. விருது பெற்ற 9 கலைஞர்களுள் இவர்கள் இருவர் மட்டுமே பெண் புல்லாங்குழல் கலைஞர்கள்.

சிக்கில் சகோதரிகள் வாசித்த புல்லாங்குழல் இசையை கேளுங்கள்








திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபன்
   (வீணை இசைக் கலைஞர்)


வீணை இசைக் கலைஞர் திருமதி. ராஜேஸ்வரி பத்மநாபனுக்கு பிறந்த நாள். அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்,  அவர் விட்டுச் சென்ற இசையை மறக்க முடியாது. பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா, வீணை வித்வான் காரைக்குடி திரு. சாம்பசிவ அய்யர். (காரைக்குடி வீணா சகோதரர்களில் இளையவர்). திருமதி ராஜேஸ்வரி பத்மநாபனின்  சகோதரர் காரைக்குடி திரு.எஸ். சுப்ரமணியன், இவர் சென்னையில் ப்ரஹத்வணி என்ற இசைப் பள்ளியை நடத்தி வருகிறார்.

ராஜேஸ்வரி பத்மநாபன், தனது 5 வயது முதல் அவரது தாத்தா சாம்பசிவ அய்யர் மறையும் வரை குருகுல முறையில் இசை பயின்றார். பின்னர், தனது வாய்ப்பாட்டு பயிற்சியை மைசூர் வரதாச்சாரியாரிடம் பயின்றார்.

இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார், அதில் “கலைமாமணி” மற்றும் “சங்கீத கலாநிதி” விருதுகள் குறிப்பிடதக்கவை.

ஒருசில வர்ணங்கள் (Varnams) மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார். கும்பேஷ்வரர் குறவஞ்சி என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்னை கலாஷேத்ராவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரது மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

திருமதி ராஜேஸ்வரி பத்மநாபன் வீணை வாசித்த நிகழ்ச்சியை இதோ உங்களுக்காக.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக